Tuesday, January 5, 2010

' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்

     ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.


    ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

    ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

    எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...'  கவிதைத் தொகுப்பு.

    தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..' ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

    சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

    இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

    காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

    படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

    பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

    தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

    அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

    தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

    என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில்  புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

    ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்


உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!


எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!


அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

    இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

    எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்


உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

    என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

    அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

    இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம்  புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!


அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.


எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

    யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

    தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது  பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன


நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

    இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

    எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

    இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின்  உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !


இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

    வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை


இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

    'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

    காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும்  ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

    பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.


எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

    இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

    'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

    'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

    என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

    'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

    நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

    'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞனொருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

    போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

    ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!


இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

    'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

    என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

    இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

    எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

    என்பதோடு முற்றுப்பெருகிறது.

    இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு  இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக் கேட்டுக் கொள்கிறேன்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி - 01.11.2009, 08.11.2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# புகலி