Tuesday, August 1, 2017

நாம் காணத் தவறும் எமது பறவைகளின் மேகங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

    மது வாசலுக்கே வந்து வந்து போகும் நமது பட்சிகளை விடவும் அயல்நாடுகளிலிருந்து வரும் வலசைப் பறவைகள்தான் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பறவைகள் மாத்திரமன்றி, உயிரற்ற சடப்பொருட்களும், கலைப்படைப்புக்களும், கலைஞர்களும், நடிகர்களும் கூட அப்படித்தான். எதுவாயிருப்பினும், வெளிநாட்டுப் பூர்வீகம் என்றாலே மனம் ஈர்க்கப்பட்டுக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் நம்மவர்கள். திரைப்படங்களை எடுத்துக் கொண்டால்கூட  நிலைமை அவ்வாறுதான் இருக்கிறது.

    இலங்கையிலுள்ள கலாசாரங்களை, நடைமுறை வாழ்க்கையை, நாள்தோறும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சிக்கல்களை, மனிதர்களுக்கான சட்டங்களை, யதார்த்தத்த வாழ்வியலைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை நமது நாட்டு சிங்களத் திரைப்படங்கள் காலத்துக்குக் காலம் மிகச் சிறப்பாக முன் வைத்துக் கொண்டேயிருக்கின்றன. எனினும், இந்தியத் தமிழ்த் திரைப்பட மற்றும் நாயக, நாயகிகள் மீது நாம் கொண்டுள்ள கண்மூடித்தனமான மோகத்தால், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள நமது நாட்டின் சிறந்த திரைப்படங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை என்பது துரதிர்ஷ்டமான விடயம். அண்மையில் வெளிவந்து பல விருதுகளை வென்றுள்ள அவ்வாறான சில சிங்களத் திரைப்படங்கள், நமது நாட்டின் பெயரை உலகளவில் கொண்டு சென்றவை. அவற்றுள் சிலவற்றைக் குறித்துப் பார்க்கலாம்.

Ho gaana pokuna - பாடும் தடாகம்

    திரைப்பட இயக்குனர் இந்திக பெர்ணாண்டோவின் இயக்கத்தில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம், சிறுவர்களுக்கான சிறந்தவொரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. எமது நாட்டைச் சூழவும் கடலிருப்பினும், கடலையே கண்டிராத பல சிறுவர்கள் இலங்கையில் இன்றும் கூட இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியவர்கள் எப்பொழுதும் அவர்களை வழிநடத்துபவர்கள்தான் என்பதையும் தெளிவுறுத்தும் திரைப்படம் இது.

    அனுராதபுர மாவட்டத்திலுள்ள ஒரு கஷ்டப்பிரதேசத்துக்கு, கொழும்பிலிருந்து ஆசிரியையாகச் செல்லும் ஒரு பெண், அங்குள்ள சிறிய பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவ, மாணவிகளை எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் கொழும்புக்கு கடல் பார்க்க அழைத்து வருகிறாள் என்பதுவும், அதற்கு அவளுக்கு எவையெல்லாம் சிக்கல்களாக அமைகின்றன என்பதுவுமே திரைப்படத்தின் கதையாக அமைந்திருக்கிறது. அதனைக் காட்சிப்படுத்தியிருப்பதுவும், கதைக்கான களமும், கதாபாத்திரத் தேர்வுகளும், நடிகர்களும், சிறந்த இயக்கமும் இத் திரைப்படத்துக்கும், இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் சர்வதேச விருதுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அண்மையில் வெளிவந்து இலங்கைத் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 150 நாட்கள் வெற்றிகரமாகத் திரையிடப்பட்ட முக்கியமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.







Bora diya pokuna - மாசுற்ற நீர்த் தடாகம்


    'பாடும் தடாகம்' வறிய சிறுவர்களின் உலகைப் பற்றிப் பேசுகையில், 'மாசுற்ற நீர்த் தடாகம்', வறுமைக் கோட்டிலுள்ள வளர்ந்தவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

    இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான 'பொர திய பொகுன(மாசுற்ற நீர்த் தடாகம்)' திரைப்படம் பேசுகிறது.

    அழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் நாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கோதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து அவளது ஜீவிதத்தை திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கோதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

Nikini Vessa - ஆகஸ்ட் மழைத் தூறல்



    சத்யஜித்தைப் போலவே, அன்றாட வாழ்க்கையில் சமூகத்தால்  கேவலமாகக் கருதப்படும், பிணங்களை அறுத்து அலங்கரிக்கும் பெண்ணொருத்தியைக் கதாநாயகியாக்கி, அவள் மூலமாக அநேகமான வறிய இலங்கைப் பெண்களின் அவல உலகை எடுத்துக் கூறியிருக்கும் மற்றுமொரு திரைப்படம் 'ஆகஸ்ட் மழைத் தூறல்'.

    ஆஸ்பத்திரிகளில் சடலங்களாக ஒப்படைக்கப்படும் பிணங்களைப் பொறுப்பேற்று, அதன் உள்ளுடல் பாகங்களை அகற்றித் தைத்து, அலங்கரித்து, அதன் உறவினர்களிடம் ஒப்படைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் தனது திரைப்படத்தின் கதை நாயகியாக்கியிருக்கிறார் இயக்குனர். அவளுக்கு உதவியாளாகக் கடமையாற்றும் இருபது வயதுகளிலுள்ள ஒரு இளைஞன் மற்றும் மத்திம வயதிலுள்ள ஒரு கட்டிட வரைகலைஞர் ஆகிய மூவரும்தான் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.

    திரைப்படமானது, இலங்கையில் காடுகளை அண்மித்து இருக்கும் வரண்ட கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையான காட்டு யானைத் தாக்குதல்கள் குறித்தும் மௌனமாக தனது பார்வையை முன்வைத்திருக்கிறது எனலாம். திரைப்படத்தின் கதையம்சத்தோடு மேற்படி பிரச்சினையானது, தொடர்ச்சியாக திரைப்படம் முழுவதும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு யானை கூட இறுதி வரை திரையில் காட்டப்படவேயில்லை. எனினும் காட்டு யானைகளால் ஏற்படும் ஆபத்துக்களைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

    இவ்வாறாக மரணத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களுடனான கதையை எழுதி, அதனைத் திரைப்படமாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இலங்கையின் இளம் இயக்குனர்களில் ஒருவரான அருண ஜயவர்தன. சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்ட இத் திரைப்படம், சிறந்த ஆசியத் திரைப்படத்துக்கான விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bambara Walalla - சுழிக் காற்று

    வாழ்க்கையானது விசித்திரமான பாதைகளைக் கொண்டது. இறுதி வரை செல்லவேண்டியிருக்கும் அப் பாதைகளில் சிலருக்கு மட்டும் அவை மென்மையானவையாகவும், சிலருக்கு அவ்வப்போது கரடுமுரடானதாகவும், இன்னும் சிலருக்கு முட்கள் மட்டுமே நிறைந்த பாதைகளாகவும் அமைந்து விடுகின்றது. அவர்களாகத் தேர்ந்தெடுக்கும் பாதைகள் முட்கள் தூவப்பட்டதாக அமையும் சாத்தியங்களும் ஆயிரம். ஆனால் பிறந்ததிலிருந்து ஏனென்றே அறியாது உயிரைக் கிழித்து வதைக்கும் முட்கள் நிரம்பிய பாதையொன்றில் பயணம் செய்ய வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்படும் ஒருவனின் கதையைச் சொல்கிறது 'பம்பர வலள்ள (whirlwind - சுழிக் காற்று)' இலங்கைத் திரைப்படம்.

    சராசரிக்கும் கீழான, எவரினதும் பார்வை படாத மனிதர்களின் இருட்டு வாழ்க்கையின் நிகழ்வுகளை விவரிக்கிறது படம். படத்தின் காட்சியமைப்புக்களும் களங்களும் பிண்ணனியும் பார்வையாளர்களை ஒரு வலி மிகுந்த கவிதையைப் போல தானாக உணரச் செய்பவை. ஒரு கிராமத்திலிருந்து, நகரத்தின் சுயநலமான நடமாட்டத்துக்குள் கதைக்களம் தெளிவாகப் புகுந்துவிடுவதைக் காட்சிகள் சொல்கின்றன. அதிகமான திருப்பங்களைக் கொண்ட வாழ்க்கையின் விபரீதமான அந்தகாரப் பக்கத்தினை, நேரடியாக முகத்திலறைந்து திறந்து காட்டியிருக்கிறது இத் திரைப்படம்.

    யாராலும் சிந்திக்கப்படாத அடித்தட்டு மக்களின், அடியாட்களின் வாழ்வானது எவ்வளவு துயரமும், உயிரச்சமும் நிறைந்ததென வெளிப்படுத்துகின்றன அதன் காட்சிகளும் பின்புலங்களும். இயக்குனரின் முதல் திரைப்படமாக, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி, இயக்கி, படத்தில் சின்னவன் எனும் பிரதான பாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார் இயக்குனர் திரு.அதுல லியனகே.

    நான் மேலே குறிப்பிட்டுள்ள சிங்கள மொழித் திரைப்படங்கள் நான்குமே அண்மையில் வெளிவந்து பல சர்வதேச விருதுகளை வென்றெடுத்தவை. அத்தோடு இலங்கையின் திறமை வாய்ந்த இளம் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின்னர், இலங்கைத் திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையிடப்பட்டவை இவை.

    எனினும் இலங்கையின் தமிழ் ரசிகர்களாகிய நாம் இவற்றில் எத்தனை திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம்? இவ்வாறான திரைப்படங்களை ஏன் எம்மால் தமிழ் மொழியில் கொண்டு வர இயலாதுள்ளது? இந்திய மசாலா தமிழ்த் திரைப்படங்களும், தொடர் நாடகங்களும் நமது மூளையை, திறமைகளை, மனப்பான்மைகளை முடங்கச் செய்வதை, செய்து கொண்டிருப்பதை எவ்வாறு தடுத்து, எமதேயான ஆற்றல்களைத் துளிர்விடச் செய்யப் போகிறோம்? சிந்திப்போம். நமது அடுத்த தலைமுறையாவது இலங்கைத் தமிழ் சினிமாவில் இவ்வாறான காத்திரமான, சிறந்த திரைப்படங்களைக் கொண்டு வர வாழ்த்துவோம். வரவேற்போம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
 நன்றி - 'பிரதிபிம்பம்', தினகரன் வாரமஞ்சரி

0 comments: